header

அண்மையவை

பதம் வகைகள்

 சொற்கள் அல்லது பதம் / பகுபதமும் பகாப்பதமும்

தமிழில் உள்ள எழுத்துக்கள், அதன் வகைகள், அவற்றின் உச்சரிப்பு முறைகள் என்பன பற்றி முன்னர் கற்றுள்ளோம். இப்பகுதியின் ஊடாக பதம் என்றால் என்ன?  பதம் எத்தனை வகைப்படும்?பதத்தின் அமைப்பு,  என்பனவற்றை பார்க்கலாம்.

எழுத்துக்கள் ஒலிகளை குறித்து நிற்கின்றன ஆனால் தனித்து எழுத்து எனும் என்று பார்க்கும்போது அதற்கு பொருள் இல்லை. அதாவது எழுத்துக்கள் பல சேர்ந்து அர்த்தமுள்ள சொற்களை உருவாக்குகின்றன. 

இவற்றில் தனி ஓரெழுத்துச் சொற்களும் அடங்கும் ஆனால் எல்லா எழுத்துக்களும் தனித்து நின்று பொருள் தருவது இல்லை. அதேபோன்று எழுத்துக்களை நமது விருப்பப்படி சேர்த்து வைப்பதனால் அர்த்தமுள்ள ஒரு சொல்லினை உருவாக்க முடியாது. இப்பொழுது கீழ்வரும் படத்தை அவதானியுங்கள்.




தொகுதி 01

தொகுதி 2

லகபாதகவல்
டபுத்பாலம்
ல்கதவபுத்தகம்
தம்பாத்கல்

மேற்படி படத்தில் உள்ள சொற்களை வைத்துக்கொண்டு தொகுதி ஒன்றிலும் தொகுதி இரண்டிலும் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

இவற்றில் தொகுதி ஒன்றில் உள்ள சொற்களை பார்த்தோமேயானால் அங்கு வெறுமனே எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால்  அவை சேர்ந்து ஒரு பொருளை உணர்த்தவில்லை ஆனால் தொகுதி இரண்டில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஏதோ ஒரு விடயத்தை உணர்த்தி வருவதை அவதானிக்க முடிகிறது. 

இதிலிருந்து எழுத்துக்களில் இருந்து தான் சொற்கள் உருவாக்கப்படுகின்றன ஆனால்  எழுத்துக்களை ஓர் ஒழுங்கான முறையில் சேர்ப்பதன் மூலமே சொற்கள் உருவாக்கப்படுகின்றன என்பதனை நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இப்பொழுது சொல்லுக்கான வரைவிலக்கணத்தை பார்ப்போமேயானால் சொல்(பதம்) என்பது எழுத்துக்கள் தனித்தோ சேர்ந்தோ நின்று பொருள் தருமாயின் அது சொல் எனப்படும். சொல்லின் இன்னுமொரு பெயரே பதம் என்பதாகும்.

  • உதாரணம் : பூ, பாடம், கதிரை, கண்கள்

இப்பொழுது எழுத்துக்களிலிருந்து சொற்கள் உருவாவதை பார்த்தோம். இனி இந்த சொல்லின் அமைப்பு பற்றி பார்க்கலாம். இந்த பதத்தினை அதன் அமைப்பை அடிப்படையாக வைத்து இரண்டு வகையில் பிரிக்கலாம்.
1. பகுபதம்
2. பகாப்பதம்


1. பகாப்பதம்

பகுபதம் பகாப்பதம் பற்றி அறிவதற்கு முன்னால் பகுத்தல் என்பது பற்றி அறிந்து கொள்வோம். பகுத்தல் என்றால் பிரித்தல் என்று பொருள்படும்.  ஆனால் இங்கு நாம் பார்க்கப்போவது பகுக்க முடியாத சொற்கள் ஆகும். அவற்றையே நாம் பகாப்பதம் என்போம்.
உதாரணம் :  மா, பட்டம், ஆட்டம், மாடம்

இந்த சொற்களை பட்+டம், ஆட்+டம், மா+டம் என்றெல்லாம் பிரிக்க முடியாது. ஏனெனில்  இச்சொற்களை பிரிக்கும் போது எந்த ஒரு பொருளும் தருவதாக இல்லை. இவ்வாறு பொருள் தரும் வகையில் பிரிக்கமுடியாத சொற்களைத் தான் நாம் பகாப்பதம் என்கின்றோம். இவ்வாறு பகாப்பதமாக இருக்கும் சொற்களை  நாம் பிரிக்க முடியாது என்பதோடு அப்படி பிரித்தாலும் அதிலிருந்து எந்த ஒரு பொருளும் வெளிப்படாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.


2. பகுபதம்

முன்னர் பகாப்பதம் பற்றி பார்த்தோம் பிரிக்க முடியாத சொற்கள் பகாப்பதத்தில் அடங்கும் என்றால் பகுபதம் என்பது பிரிக்கக் கூடிய சொற்களாகும். அதாவது எந்த சொற்களை பிரிக்கும்போது அங்கு உள்ள உறுப்புக்கள் பொருள்தரும் வகையில் உள்ளதோ அது பகுபதம் ஆகும்.
  • உதாரணம் : மாடுகள், மரங்கள், பாடுதல், ஆடுதல்.
  • மாடு+கள்
  • மரம்+கள்
  • பாடு+தல்
  • ஆடு+தல்
மேற்படி சொற்களை மேற்கண்டவாறு பிரிக்கலாம். இவற்றைப் பார்க்கும்போது முதல் சொற்கள் பொருள் தரும் வகையிலும் அதனை தொடர்ந்து வரும் கள், தல் ஆகிய சொற்கள் நாம் பகாப்பகத்தில் பார்த்தது போன்று பொருள் தராதது போன்றும்  தென்படலாம். ஆனால் இங்குதான் நாம் ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும். சொற்களை பிரிக்கும்போது அங்கு வரும் உறுப்புக்கள்  இருவகை பொருளை தரக்கூடியதாக இருக்கலாம்.
1. சொற்பொருள்
2. இலக்கணப் பொருள்

பகாப்பதத்தில் இவ்விரண்டு வகையான பொருளையும் நாம் காண முடியாது. ஆனால் பகுபத உறுப்புகளை பிரிக்கும் போது இவ்வாறு இரு பொருள்களையும் அவதானிக்கலாம்.

உதாரணமாக மாடுகள் எனும் சொற்களை நாம் எடுத்துக்கொண்டால் இதனை மாடு+ கள் என்று பிரிப்போம். இதில் வரும் மாடு என்பது சொற்பொருளாகவும் கள் என்பது பன்மை உணர்த்தும் விகுதியாகவும் காணப்படும். இந்த விகுதி என்பதே நாம் கூறும் இலக்கணப் பொருளாகும்.

அதேபோல் பாடுதல் எனும் சொல்லை எடுத்துக்கொண்டால் பாடு என்பது ஒரு செயலை உணர்த்தும் வினைச்சொல்லாகவும்(சொற்பொருள்)  தல் என்பது தொழிற்பெயர் விகுதியாகவும் அமைகிறது. இதில் நாம் கூறும் தொழிற்பெயர் விகுதியே இலக்கணப் பொருளாகும்.



இப்பொழுது உங்களுக்கு இந்த விகுதி எனும் சொல் புதிதாக ஒன்றாகத் தோன்றலாம் ஆனால் நாம் பகுபத உறுப்புகள் பற்றி பார்க்கும்போது இதனுடன் சேர்த்து மேலும் பல சொல்லுறுப்புக்கள் பற்றி தெளிவாகப் பார்க்கலாம். இப்பொழுது பகுபத உறுப்புகளில் ஒன்று இந்த விகுதி என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு சொல்லை பிரிக்கும் போது வரும் உறுப்புகள் குறைந்தது இரண்டு காணப்படும். இப்பொழுது உங்களுக்கு பகுபதம் பகாப்பதம் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகின்றேன் அடுத்த பகுதியில் பகுபத உறுப்புகள் பற்றி விரிவாகவும்,  சொற்களின் வகைகள் பற்றியும் பார்க்கலாம்.


தமிழில் உள்ள எழுத்துக்கள் பகுதிக்கு செல்ல >>>
தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பு முறைகள் >>>
சார்பெழுத்துக்கள் >>> 


கருத்துகள் இல்லை