சார்பெழுத்துக்கள்
சார்பெழுத்துக்கள்
உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும், உயிர் மெய் எழுத்துக்களும், ஆய்த எழுத்தும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தமக்கு உரிய மாத்திரையை விட குறுகி அல்லது நீண்டொலித்தல் சார்பெழுத்துக்கள் எனப்படும்.
- சார்பெழுத்துக்கள் 10 வகைப்படும். அவையாவன
- உயிர் மெய் எழுத்துக்கள்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- ஐகாரக் குறுக்கம்
- ஔகாரக் குறுக்கம்
- மகரக் குறுக்கம்
- ஆய்தக் குறுக்கம்
- குற்றியலுகரம்
- குற்றியலிகரம்
01. உயிர் மெய் எழுத்துக்கள்
உயிர் எழுத்துக்களை , மெய் எழுத்துக்களை குறிக்க தனி எழுத்துக்கள் இருப்பது போன்றே உயிர் மெய் சேர்ந்த கூட்டு ஒலிகளை குறிக்கவும் தனி தனி எழுத்துக்கள் காணப்படுகின்றன. உயிர் மெய் எழுத்துக்களின் உச்சரிப்பு முறை பின்வருமாறு அமையும்
- க் + அ = க
- க் + ஆ = கா
- க் + இ = கி
- க் + ஈ- = கீ....
உயிர் மெய் எழுத்துக்களின் அமைப்பு முறை
மெய் எழுத்துக்களுடன் உயிர் எழுத்துக்களுக்குரிய துணைக்குறிகளுடன் ( உயிர்க்குறிகள் ) இணைந்து உயிர் மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.- ( உ + ம் )
இவ்வாறாக உயிர் மெய் எழுத்துக்களின் அமைப்பு பின்வருமாறு காணப்படும்.
1. மெய்யுடன் அகரம் சேரும் போது மெய் எழுத்துக்கள் புள்ளி நீங்கி வடிவம் பெறும்.
உ + ம் = மெய்+அ --» = புள்ளி நீங்கிய உயிர் மெய்
- க் + அ = க
- ச் + அ = ச
2. மெய்யுடன் ஆகாரம் சேரும் போது மெய் எழுத்துக்கள் புள்ளி நீங்கி அதனுடன் அரவு சேர்த்து எழுதப்படும்.
- உ + ம் = மெய் + ஆ = உயிர் மெய்
- க் + ஆ = கா
- ச் + ஆ = சா
3. மெய்யுடன் இகரம் சேரும் போது மெய் எழுத்துக்கள் புள்ளி நீங்கி அதனுடன் விசிறி சேர்த்து எழுதப்படும்.
- உ + ம் = மெய் + இ = உயிர் மெய்
- க் + இ = கி
- ச் + இ = சி
4. மெய்யுடன் ஈகாரம் சேரும் போது மெய் எழுத்துக்கள் புள்ளி நீங்கி அதனுடன் விசிறியும் சுழியும் சேர்த்து எழுதப்படும்.
- உ + ம் = மெய் + ஈ = உயிர் மெய்
- க் + ஈ = கீ
- ச் + ஈ = சீ
5. மெய்யுடன் உகரம் சேரும் போது மெய் எழுத்துக்கள் புள்ளி நீங்கி பின்வரும் வடிவங்களில் அமைகிறது.
- உ + ம் = க் + உ = கு
டு, மு, ரு, ளு, ழு
- ங் + உ = ஙு
சு, பு, யு, வு
- ஞ் + உ = ஞு
ணு, து, நு, லு, று, னு
கிரந்த எழுத்துக்களுடன் உகரம் சேரும் போது பின்வருமாறு அமையும்
- ஜு, ஸு, ஷு, ஹு
6. மெய்யுடன் ஊகாரம் சேரும் போது மெய் எழுத்துக்கள் புள்ளி நீங்கி பின்வரும் வடிவங்களில் அமைகிறது.
- உ + ம் =
- கூ
- டூ, மூ, ரூ, ளூ, ழூ
- ஙூ, சூ, பூ, யூ, வூ
- ஞூ, ணூ, தூ, நூ, லூ, றூ, னூ
கிரந்த எழுத்துக்களுடன் ஊகாரம் சேரும் போது பின்வருமாறு அமையும்
- ஜூ, ஷு, ஸூ, ஹூ
7. மெய்யுடன் எகரம் சேரும் போது மெய் எழுத்துக்கள் புள்ளி நீங்கி ஒற்றைக் கொம்பு சேர்த்து எழுதப்படும்.
- உ + ம் = க் + எ = கெ
8. மெய்யுடன் ஏகாரம் சேரும் போது மெய் எழுத்துக்கள் புள்ளி நீங்கி இரட்டைக் கொம்பு சேர்த்து எழுதப்படும்.
- உ + ம் = க் + ஏ = கே
9. மெய்யுடன் ஐகாரம் சேரும் போது மெய் எழுத்துக்கள் புள்ளி நீங்கி சங்கிலிக் கொம்பு சேர்த்து எழுதப்படும்.
- உ + ம் = க் + ஐ = கை
10. மெய்யுடன் ஒகரம் சேரும் போது மெய் எழுத்துக்கள் புள்ளி நீங்கி ஒற்றைக் கொம்பு, அரவு சேர்த்து எழுதப்படும். இதன் அமைப்பானது ஒற்றைக் கொம்பு,மெய்,அரவு எனும் ஒழுங்கில் காணப்படும்.
- உ + ம் = க் + ஒ = கொ
11. மெய்யுடன் ஓகாரம் சேரும் போது மெய் எழுத்துக்கள் புள்ளி நீங்கி இரட்டைக் கொம்பு, அரவு சேர்த்து எழுதப்படும். இதன் அமைப்பானது இரட்டை கொம்பு,மெய்,அரவு எனும் ஒழுங்கில் காணப்படும்.
- உ + ம் = க் + ஓ = கோ
12. மெய்யுடன் ஔகாரம் சேரும் போது மெய் எழுத்துக்கள் புள்ளி நீங்கி ஒற்றைக் கொம்பு, வெள்ளிக்கால் சேர்த்து எழுதப்படும். இதன் அமைப்பானது ஒற்றைக் கொம்பு,மெய்,வெள்ளிக்கால் எனும் ஒழுங்கில் காணப்படும்.
- உ + ம் = க் + ஔ = கௌ
2. ஆய்தம்
முக்கோண அமைப்பில் உள்ள மூன்று புள்ளிகளால் ஆன எழுத்து வடிவம் ஆய்தம் எனப்படும். இது ஆங்கில எழுத்தான h அல்லது கிரந்த எழுத்தான ஹ் ஒலிபோல் ஒலிக்கப்படுகின்றது.
தனிக் குற்றெழுத்துக்கும் வல்லின எழுத்துக்கும் இடையே ஆய்தம் வரும் என இலக்கண நூல்கள் கூறுகின்றன. ஆய்த எழுத்தின் மாத்திரை அளவு அரை ஆகும். பழந்தமிழில் இது பரவலாக வழக்கிலிருந்தாலும் தற்காலத்தமிழில் இதன் பயன்பாடு குறைவாகவே காணப்படுகிறது.
உ + ம்- அஃது, இஃது, உஃது, எஃகு... - பழந்தமிழ் இலக்கியங்கள்
- எஃகு, நுஃமான் - தற்காலத் தமிழ்
3. உயிரளபெடை
அளபெடை என்பது அளவு எடுத்தலாகும். அதாவது நீண்டொலித்தல் எனப் பொருள்படும். நெட்டெழுத்துக்கள் ஏழும் தமக்குரிய மாத்திரையினின்று நீண்டொலித்தல் உயிரளபெடை எனப்படும்.
உலகியல் வழக்கில் பாடுதல், புலம்புதல், கூவியழைத்தல் முதலான செயற்பாடுகளின்போதும் செய்யுளில் ஓசை குறைந்தவிடத்து அதை நிறைவு செய்தற் பொருட்டும் நெட்டெழுத்துக்கள் நீண்டொலிக்கும். சொல்லின் முதல், இடை, கடை ஆகிய நிலைகளில் இவை நீண்டொலிப்பதுண்டு.
உ + ம்- ஓஒதல் வேண்டும் - சொல்லின் முதல்
- தெய்வம் தொழாஅள் - சொல்லின் இடை
- நசைஇ - சொல்லின் கடை
இவ்வாறு நெட்டெழுத்துக்கள் அளபெடுத்தலை குறிக்க அதனதன் இனக் குற்றெழுத்து அதன் அருகில் எழுதப்படும். இதற்கான மாத்திரை அளவு 3 ஆகும்.
4. ஒற்றளபெடை
ஒற்றளபெடை செய்யுளில் ஓசை குறையும் இடத்து மெல்லின எழுத்துக்கள் ஆறும், ர்,ழ் தவிர்ந்த நான்கு இடையின எழுத்துக்களும், ஆய்தமுமாக மொத்தம் 11 எழுத்துக்கள் தமக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டாெலித்தல் ஒற்றளபெடை எனப்படும்.
ஒரு மெய் நீண்டு ஒலிப்பதற்கு அடையாளமாக அதே மெய் அதன் பக்கத்தில் எழுதப்படும். பழந்தமிழ் இலக்கியங்களில் ஒற்றளபெடைக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
உ + ம்- இலங்ங்கு வெண்பிறை என்னும் தாெடரில் இலங்கு என்னும் சாெல் இலங்ங்கு என நீண்டாெலித்தது.
- திரள்ள் சேனை
- எஃஃகு
ஒற்றெழுத்துக்கள் சொல்லின் இடையிலும் இறுதியிலுமே அளபெடுக்கும். இதன் மாத்திரை அளவு 1 ஆகும்.
- தற்காலத் தமிழில் ஒற்றளபெடை பயன்படுத்தப்படுவதாக தெரியவில்லை.
5. ஐகாரக் குறுக்கம்
ஐகாரம் நெடில் என்றும், அது இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் என்றும் இலக்கண நூல்கள் கூறும். ஆயினும், தனித்து ஐ என்று தன்னைச் சுட்டும் பாேதும் அளபெடுக்கும் பாேதும் மட்டும்தான் அது நெடிலாக ஒலிக்கும். ஏனைய இடங்களில் அது குறில்போல் ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும். அவ்வாறு ஐகாரம் தமக்குரிய மாத்திரையினின்று குறுகி ஒலிப்பதையே ஐகாரக் குறுக்கம் என்பர்.
உ + ம்- ஐயர்
- தையல்
- கலைஞர்
- தலை
- ஐப்பசி
- வையகம்
- வளையம்
- பனை
- ஐம்பது
- கைது
- மனைவி
- பூனை
மேல் உள்ள சொற்களில் முதல், இடை, கடை நிலைகளில் ஐகாரம் அய் போல் குறுகி ஒலிப்பதைக் காணலாம். முதல் மூன்று சொற்களும் அய்யர், அய்ப்பசி, அய்ம்பது, என இன்று பலராலும் எழுதப்படுகின்றன.
ஐகாரத்தைத் தமிழ் அரிச்சுவடியில் இருந்து அகற்றிவிடலாம் என்போரும் உளர். அவ்வாறு அகற்றிவிட்டால், தையல், வையகம், கைது முதலிய சொற்களையும் தய்யல், வய்யகம், கய்து என எழுத வேண்டி வரும் .தலை, பனை, பூனை போன்ற சொற்களையும் தலய், பனய், பூனய் என எழுத வேண்டி வரும்.ஐகாரக் குறுக்கத்திற்கான மாத்திரை அளவு 1 ஆகும்.
6. ஔகாரக் குறுக்கம்
ஐகாரம் போல் ஔகாரமும் நெடிலாகவே கருதப்படுகின்றது. ஆயினும், ஔ என்று தன்னைச் சுட்டும் போதும், அளபெடுக்கும் போதும் மட்டுமே இது நெடிலாக ஒலிக்கப்படுகின்றது. ஏனைய இடங்களில் குறில்போல் ஒரு மாத்திரை அளவே ஒலிக்கப்படுகின்றது. இவ்வாறு ஔகாரம் தன் மாத்திரையிலிருந்து குறுகி ஒலிப்பதே ஔகாரக் குறுக்கம் எனப்படும்.
உ + ம்- ஔவையார்
- வௌவால்
- சௌகரியம்
ஔவயைார் என்பது அவ்வையார் என்றும் வௌவால் என்பது வவ்வால் என்றும் சௌகரியம் என்பது சவுகரியம் என்றும் எழுதப்படுவதைக் காண்க. எனினும், கௌரி போன்ற இயற்பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. ஔகாரத்தையும் தமிழ் அரிச்சுவடியில் இருந்து அகற்றி விடலாம் என்போரும் உளர். ஔகாரக் குறுக்கத்திற்கான மாத்திரை அளவு 1 ஆகும்.
7. மகரக் குறுக்கம்
மகரத்துக்குரிய மாத்திரை அரை. ஆயினும், பழந்தமிழில் மகரமானது னகர, ணகரங்களை அடுத்தும், வகரத்தின் முன்னும் வரும் போது தன் மாத்திரையில் குறுகி ஒலித்தது. இவ்வாறு குறுகி ஒலித்ததையே மகரக் குறுக்கம் என்றனர்.
உ + ம் =- போன்ம், மருண்ம், தரும் வளவன் என்பனவற்றை இலக்கண நூல்கள் எடுத்துக்காட்டாகத் தருகின்றன.
தற்காலத் தமிழில் போன்ம், மருண்ம் என்பன போலும், மருளும் வழங்குகின்றன. இன்று வகரத்தின் முன் வரும் மகரம் குறுகி ஒலிப்பதாகத் தெரியவில்லை.
உ + ம்
- வரும் வழியில்
- நாங்களும் வந்தோம்
- நானும் வருவேன்
- போகும் வழி தெரியவில்லை
- வாரி வழங்கும் வள்ளல்
8. ஆய்தக் குறுக்கம்
சொற்புணர்ச்சியின் போது ளகர,லகர ஈற்றுச் சொற்களின் முன் தகரம் வருமாயின் ளகர,லகர ஈறுகள் ஆய்தமாக திரியும் என்பது பழந்தமிழ் வழக்கு. இவ்வாறு தோன்றும் ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து குறுகி ஒலிக்கும். இதுவே ஆய்தக்குறுக்கம் என தமிழ் இலக்கண நூலார் கூறுகின்றனர்.
உ + ம் = அல் + திணை = அஃறிணைமுள் + தீது = முஃடீது
- தற்காத்தமிழில் ஆய்தக் குறுக்கமானது வழக்கில் இல்லை.
9. குற்றியலுகரம்
உகரத்திற்குரிய மாத்திரை அளவு 1 ஆகும். ஆனால் உகரம் சில இடங்களில் தனக்குரிய மாத்திரையிலிருந்து குறைந்தொலிக்கும். அது குற்றியலுகரம் எனப்படும். அதாவது தனிக்குற்றெழுத்து அல்லாத ஏனைய எழுத்துக்களின் பின்னே வல்லின மெய்மீது ஏறிவரும் உகரம் குற்றியலுகரம் எனப்படும்.
உ + ம் = ஆடு , பாக்கு, கொம்பு- குற்றியலுகரத்திற்கான மாத்திரை அளவு 1 ஆகும்.
குற்றியலுகரத்தின் அயல் எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு குற்றியலுகரமானது 6 வகைப்படும்.
1. வன்றொடர்க் குற்றியலுகரம்
வல்லின மெய்யை அடுத்து வல்லின மெய்மீது ஏறிவரும் உகரம் வன்றொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
- உ + ம்= கொக்கு, பட்டு
2. மென்றொடர்க் குற்றியலுகரம்
மெல்லின மெய்யை அடுத்து வல்லின மெய்மீது ஏறிவரும் உகரம் மென்றொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
- உ + ம் = நெஞ்சு, வண்டு, குஞ்சு
3. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
இடையின மெய்யை அடுத்து வல்லின மெய்மீது ஏறிவரும் உகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
- உ + ம் = மார்பு, சால்பு
4. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
தனி நெடில் அல்லாத ஏனைய உயிர்களை அடுத்து வல்லின மெய்மீது ஏறிவரும் உகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
- உ + ம் = வரகு, பயறு, சாப்பாடு
5. நெடில்த்தொடர்க் குற்றியலுகரம்
நெட்டெழுத்துக்களை அடுத்து வல்லின மெய்மீது ஏறிவரும் உகரம் நெடில்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். இது ஈரெழுத்துச் சொற்களில் அமைந்ததாக காணப்படும்.
- உ + ம் =மாடு, ஆடு, காடு
6. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
ஆய்த எழுத்தை அடுத்து வல்லின மெய்மீது ஏறிவரும் உகரம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
- உ + ம் = அஃது, இஃது, எஃது
10. குற்றியலிகரம்
இகரம் தன் மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் எனப்படும். பழந்தமிழில் யகரத்திற்கு முன்வரும் குற்றியலுகரம் புணர்ச்சியில் இகரமாகத் திரியும். அந்த இகரம் தன் மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும்.
- உ + ம் = நாகு + யாது = நாகியாது
குற்றியலிகரமானது தற்காலத்தில் வழக்கில் இல்லை.
- உ + ம் = நாடு யாவருக்கும் சொந்தம்
https://www.ilakkanatamilan.xyz/2022/05/Pathu%20paatu-kurunji%20paatu.html
பதிலளிநீக்குஒங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே🥰
பதிலளிநீக்குசிறப்பு. நன்றி. தொடர்க.
பதிலளிநீக்கு