header

அண்மையவை

பகுபத உறுப்புக்கள்

பதம் - பகுபத உறுப்புக்கள்

பதம் என்றால் என்ன? பதத்தினுடைய பிரிவுகள், பகுபதம், பகாப்பதம் போன்ற விடயங்களை முன்னரே பகுதி ஒன்றில் கற்றுள்ளோம். இந்த பகுதியில் பகுபத உறுப்புகள் பற்றி பார்க்கலாம்.

பகுபத உறுப்புக்கள்

பகுதி, விகுதி முதலிய ஆக்க கூறுகளாக பிரிக்க தக்க சொல் பகுபதம் எனப்படும். அது பெயர்ப் பகுபதம் வினைப்பகுபதம் என மேலும் இரண்டு வகைப்படும்.

உதாரணம்
1. பொன்னன் - பெயர்ப் பகுபதம்
2. நடந்தான் - தெரிநிலை வினைப் பகுபதம்
3. பெரியன் - குறிப்பு வினைப் பகுபதம்

இங்கு முதலாவதாக வந்துள்ள சொல் பெயர்ப்பகுபதமாகவும் அதனைத் தொடர்ந்து வந்துள்ள இரு சொற்களும் வினைப்பகுபதமாகவும் அமைந்து வந்துள்ளதைக் காணலாம்.

பகுபத உறுப்புகள்

பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் போன்றன பகுபத உறுப்புகள் ஆகும். பகுபதம் ஒன்றில் குறைந்தது பகுதி விகுதி ஆகிய இரு உறுப்புகளாயினும் காணப்படும். இப்பொழுது அதற்கான சில உதாரணங்கள்

பகுபத உறுப்புக்கள்



பகுதி

பகுபதத்தின் முதலில் நிற்கும் கூறு பகுதியாகும்.

பகுதியினுடைய சில பண்புகள்
•  சொல்லின் முதலில் வரும்
•  பகாப்பதமாக இருக்கும்
•  ஏவற் பொருளில் வரும்.
பகுதி


மேற்குறிப்பிட்ட மூன்று பண்புகளையும் இவ் உதாரணத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.


•  பெயர்ப் பகுபதங்களும் குறிப்பு வினைப்பகுபதங்களும் பெரும்பாலும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், என்னும் அறுவகைப் பெயர்ச்சொற்களும் சிறுபான்மை இடைச் சொற்களும் பகுதியாய் வரும். அறுவகைப் பெயரடியாகப் பிறந்த இப்பகுபதம் பெயராகவும் குறிப்பு வினைமுற்றுக்களாகவும் வரும்.

அறுவகைப் பெயரடியாக அமைந்த பகுபதங்கள்


•  பொருளை அடிப்படையாகக் கொண்ட பெயர்ப் பகுபதம்
பொன்னன் = பொன் + அன்

•  இடத்தை அடிப்படையாகக் கொண்ட பெயர்ப் பகுபதம்
ஊரன் = ஊர் + அன்

•  காலத்தை அடிப்படையாகக் கொண்ட பெயர்ப் பகுபதம்
வேனிலான் = வேனில் + ஆன்

•  சினையை அடிப்படையாகக் கொண்ட பெயர்ப் பகுபதம்
கண்ணன் = கண் + அன்

•  குணத்தை அடிப்படையாகக் கொண்ட பெயர்ப் பகுபதம்
கரியன் = கருமை + அன்

•  தொழிலை அடிப்படையாகக் கொண்ட பெயர்ப் பகுபதம்
கூத்தன் = கூத்து + அன்


•  பெயர்ப்பகுபதங்களுக்கு இடைச்சொற்கள் பகுதியாக வந்துள்ளதை கீழே காணலாம்.
பெயர்ப் பகுபதம்



•  குறிப்பு வினைப் பகுபதம் களுக்கு இடைச்சொற்கள் பகுதியாக வந்துள்ளதைக் காணலாம்.
குறிப்பு வினை பகுபதம்


•  தெரிநிலை வினைப் பகுபதங்களுக்கு பெரும்பாலும் நட, வா, படி முதலான வினையடிகளும் சிறுபான்மையான பெயர்ச்சொல், இடைச்சொல் உரிச்சொல் என்பன பகுதியாய் வரும்.
உதாரணம்
• வந்தான் - வா(வ) + த்(ந்) + த் + ஆன்
                     (வினையடிப்பகுதி)

• சித்திரித்தான் - சித்திரி + த் + த் + ஆன்
இங்கு சித்திரி எனும் பெயர்ச்சொல் பகுதியாய் வந்துள்ளது.

• போன்றாள் - போல் + ற் + ஆன்
இங்கு போல் எனும் இடைச்சொல் பகுதியாய் வந்துள்ளது.

• மாண்டான்
இங்கு மாண் எனும் உரிச்சொல் பகுதியாக வந்துள்ளது.


விகுதி


பகுபதத்தின் இறுதியில் நிற்கும் கூறு விகுதி எனப்படும். விகுதிகள் சொல் வகையால் இடைச்சொல்லின் பாற்படும். விகுதிகளை பெயர்ச்சொல் விகுதிகள், இடைச்சொல் விகுதிகள் என இரு பிரிவில் அடக்கலாம்.


•  பால் காட்டும் பெயர் விகுதிகள்
அள், ஆள், ன், அன், ஆன், அர்  ஆர், து, வை

•  தொழிற்பெயர் விகுதிகள்
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, காடு, பாடு
ஓடு + தல் = ஓடுதல்
ஆடு + அல் = ஆடல்

•  பண்புப்பெயர் விகுதிகள்
மை, சி, பு, உ, கு, அம், நர்
நல் + மை = நன்மை

வினைச்சொல் விகுதிகள்
•  பெயரெச்ச விகுதிகள்
அ, உம்
செய்க
செய்யும்

•  வினையெச்ச விகுதிகள்
உ, இ, ய், பு, ஆ
வந்து
ஓடி
போய்


இடைநிலை

பகுபதங்களின் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்பது இடைநிலை எனப்படும். இவை சொல்வகையால் இடைச்சொற்களின் பாற்படும். இடைநிலைகள் பெயர் இடை நிலை என்றும் வினை இடைநிலை என்றும் எதிர்மறை இடைநிலை என்று மூன்று வகைப்படும்.

•  பெயர் இடைநிலைகள்

அறிஞன் = அறி + ஞ் + அன்
ஓதுவான் = ஓது + வ் + ஆன்

இங்கு வந்துள்ள ஞ், வ் ஆகியவை பெயரிடைநிலைகள் ஆகும்.


•  வினை இடைநிலைகள்
வினை இடைநிலைகள் மூன்று வகைப்படும்.
1. இறந்தகால இடைநிலைகள்
     த், ட், ற், ன், இன்

2. நிகழ்கால இடைநிலைகள்
    கின்று, கிறு

3. எதிர்கால இடைநிலைகள்
     ப், வ்

  • எதிர்மறை இடைநிலைகள்
இல், ஆல், ஆ, மாட்டு

சந்தி

பகுதிக்கும் இடைநிலைக்குமிடையில் அமைந்து வருவது சந்தி ஆகும். சில வேளைகளில் பகுதிக்கும் சாரியைக்கும் இடையிலும் வரலாம்.
உதாரணம்
பகுபத உறுப்பு - சந்தி


சாரியை

இடைநிலைக்கும் விகுதிக்குமிடையில் அமைந்து வருவது சாரியை ஆகும். சில இடங்களில் சந்திக்கும் விகுதிக்கும் இடையிலும் வரலாம்.
உதாரணம்
பகுபத உறுப்பு சாரியை


விகாரம்

பகுபத உறுப்புக்களில் ஏற்படும் மாற்றங்கள் விகாரம் எனப்படும். விகாரமானது பின்வருமாறு அமைந்து வரும்.

•  பகுதியில் வரும் நெடில் எழுத்து குறிலாக மாறி வருதல்.
உதாரணம்
கண்டான் = காண் + ட் + ஆன்
இங்கு காண் எனும் பகுதி கண் என மாற்றமடைந்து வந்துள்ளது.

•  பகுதியில் ஒரு மெய் எழுத்துக்கு பதிலாக இன்னுமொரு எழுத்து வருதல்.
உதாரணம்
சொன்னார் - இங்கு வரும் சொல் எனும் பகுதி சொன்  என மாறியுள்ளது.
ல் - ன் ஆக விகாரமடைந்துள்ளது.

சந்தியில் த் எழுத்து ந் ஆக மாறியுள்ளது.
வந்தான் = வா + த்(ந்) + த் + ஆன்.

இப்பகுதியின் மூலம் பகுபத உறுப்புக்கள் பற்றிய தெளிவான விளக்கத்தினைப் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறோம்.  மேலும் இதுபோன்ற தகவல்களைப் பெற தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்.

பதம் தொடர்பான விளக்கம் பகுதி ஒன்றில் தரப்பட்டுள்ளது.  பகுதி ஒன்றிற்கு செல்ல இங்கே அழுத்தவும்...


நன்றி.



கருத்துகள் இல்லை