header

அண்மையவை

தொடர் மொழிக்கு ஒரு மொழி - பகுதி 02

 தொடர்மொழிக்கு ஒரு மொழி எனும் பகுதியில் இது இரண்டாவது பகுதி.  முதல் பகுதியினைக் காண அதன் இணைப்பானது இந்தச் சொற்களின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது.  மாணவர்களாகிய நீங்கள் அதனையும் கற்று உங்களின் தமிழறிவினை விருத்தி செய்து கொள்ளுங்கள்.

தொடர் மொழிக்கு ஒரு மொழி - பகுதி 02



•  அகாலமரணம் : வயோதிபம் அடைந்து இறக்காமல் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் மரணம் சம்பவித்தல்.

•  அங்கதம் : வெளிப்படை பொருளில் புகழ்ந்து மறை பொருளில் இகழ்ந்தும் கூறுவது.

•  அரங்கேற்றம் : அறிஞர் பலர் கூடிய சபை நடுவே புதிதாக ஆக்கப்பட்ட நூலையோ அல்லது ஒரு கலை நிகழ்வு படித்தோ அல்லது செய்து காட்டியோ அச் சபையினரை ஏற்றுக் கொள்ளச் செய்தல்.

•  அஞ்ஞாதவாசம் : பிறர் தம்மை இன்னாரென்று அறியாதவாறு மாறுவேடம் பூண்டு மக்கள் மத்தியில் வசித்தல்.

•  அட்டாவதானி : ஒரே நேரத்தில் எட்டு விடயங்களை அவதானித்தல்.

•  அல்லங்காடி : மாலையிலோ அல்லது இரவிலோ கூடும் சந்தை.

•  அலி : ஆணும் பெண்ணும் இல்லாத தன்மை

•  அனுபந்தம் : ஒரு நூலின் இறுதியில் சேர்க்கப்படும் பகுதி.

•  அமங்கலி : கணவனை இழந்த பெண்

•  அழைப்பாணை : குறித்த ஒருநாளில் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கும்படி  ஒருவருக்கு நீதிபதியால் விடுக்கப்படும் அதிகாரபூர்வமான கட்டளை.

•  அகழி : கோட்டையை சுற்றி அமைந்த நீர்நிலை

•  அட்டில் : உணவு வகைகளை ஆக்கும் இடம்.

•  அகதி : அனைத்து உடைமைகளையும் இழந்தவன்

•  அசகாயசூரன் : யார் துணையுமின்றி தனியே நின்று பகைவரை வெல்லும் திறன் படைத்தோன்.

•  அவிசு : வேள்வியில் தேவருக்கு சமைக்கும் உணவு / உப்பின்றி சமைத்த பச்சை அரிசி சாதம்

•  அறம் பாடுதல் : பிறருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியனவாக சொற்களையும் சொற்றொடர்களையும் சேர்த்து கவிபாடல்

•  அந்தாதி : ஒரு செய்யுளின் அந்தம் அடுத்த செய்யுளின் ஆதியாக வரத் தொடுப்பது

•  அருள்புரி பத்திரம் : அரசன், ஒருவனது சேவகம், கைங்கர்யம்  முதலியவைகளை வியந்து கொண்டாடி அவனுக்கு கிராமம் முதலியவற்றை கொடுத்ததற்கு சாதனமாக எழுதிக்கொடுக்கும் பத்திரம்.

•  அரும்பொருட் சாலை : பண்டு தொட்டு இன்று வரையிலான நூதன பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும் இடம்

•  ஆத்திகன் : கடவுள் இருக்கிறார் என நம்புபவன்.

•  ஆதனம் : ஒருவருக்குரிய நிலம் முதலிய சொத்துக்கள்

•  ஆதுலர்சாலை : வறியவர்க்கும்,  அங்கவீனர்களுக்கும், முதியோருக்கும் உண்டியும், உறையுளும் அளித்து ஆதரிக்கும் இடம்.

•  ஆவணம் : உரிமை கொண்டாடுவதற்குச் சான்றாக எழுத்துருவில் அமைந்த பத்திரம்.

•  ஆகுதி : வேள்வியில் மந்திரபூர்வமாகச் செய்யப்படும் ஓமம்.

•  ஆதீனம் : சமயப்பணி புரியும் மடம்.

•  இடக்கரடக்கல் : சபையில் சொல்லத்தகாத சொல்லை மறைத்து வேறு வகையில் கூறுதல்.

•  இரட்டுறமொழிதல்: இரண்டு பொருள்படக் கூறுதல்.

•  இராக்கதம் : பெண்ணும் சுற்றமும் உடன்படாமல் வலிந்து கொள்ளும் மணம்.

•  இலக்கணப்போலி: இலக்கணம் இல்லாததாயினும் இலக்கணமுடையதாக தொன்றுதொட்டு சான்றோரால் வழங்கப்படுவது.

•  இரவுக்குறி: களவுப்புணர்ச்சியில் இரவுநேரத்தில் சந்திக்க நியமிக்கும் இடம்.

•  ஈமக்கிரியை: ஒருவர் இறந்ததன் பின்னர் செய்யப்படுகின்ற சமயச்சடங்குகள்.

•  உப்பரிகை  : செல்வந்தர்களின் வீடுகளில் ஓய்வு நேரங்களில் கூடியிருந்து பொழுது போக்குவதற்காக அமைக்கப்பட்ட மேல் மாடம்.

•  உயர்வு நவிற்சி : ஒன்றின் இயல்புநிலைக்கு மேல் உயர்த்திக் கூறுவது.

•  உரைகல் : பொன்னை உரசி அதன் தரத்தை அறிந்து கொள்வதற்கு உபயோகிக்கப்படும் ஒருவகைக் கல்.

•  உழுவலன்பு : பல பிறவிகள் தோறும் தொடர்ந்து வரும் அன்பு.

•  உடன்போக்கு: தலைவி தலைவனுடன் செல்லல்.

•  உழைச்செல்வன் : நோயாளிக்குப் பக்கத்தில் இருந்து மருந்து முதலியன கொடுப்பவன்.

•  உளறுதல் : அனைத்து விடயங்களையும்/இரகசியங்களை வெளிப்படையாகக் கூறுதல்.

•  உலோகாயுதன் : உலகமும், உலக இன்பங்களும் மாத்திரமே மெய் என்றும் கடவுளோ மறுமையோ இல்லை என்று வாதிப்பவன். 

•  எதுகை : செய்யுள்களில் வரும் அடிகளில் / வாக்கியத்தில் இடம்பெறும் சொற்களில் இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது.

•  எய்ப்பில் வைப்பு : முதுமைக் காலத் தேவைகளுக்காக சேமித்து வைக்கப்படும் பொருள்.

•  எட்டிப்பரவு : வணிகத்தில் சிறந்தோருக்கு அரசன் கொடுத்த பூமி

•  ஏகபோகம் : ஒருவர் முழுப்பொருளையும் தானே அனுபவித்தல்.

•  ஒத்திகை : கலைநிகழ்வுகளை மேடையேற்றுவதற்கு முன் சரி, பிழை பார்த்து திருத்தும் நிகழ்வு.

•  ஒட்டுண்ணி : மற்றொரு உயிரிலிருந்து தன் உணவை உறிஞ்சி வாழும் உயிரினம். 

ஒப்பாரி : ஒருவர் இறந்த பின்னர் அவரை நினைத்துப் பாடப்படும் பாடல்.

•  ஒப்புரவு : உலக நடை அறிந்து ஒழுகுதல்.

•  ஒற்றி : சொத்தை அனுபவிக்கும் உரிமையுடன் கூடிய அடைமானம்.

•  ஓம்படை : ஒருவரை பேணிப்பாதுகாத்துத் தருமாறு இன்னொருவரிடம் ஒப்படைத்தல்.

•  ஓலக்கம் : அரசனது சபா மண்டபத்திலே அமைச்சர், படைத்தலைவர், அறிஞர் முதலியோர் வீற்றிருக்கும் இடம். 

•  ஓய்வூதியம் : அரச சேவையிலிருந்து இளைப்பாறிய ஒருவருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் பணம். 

தொடர்மொழிக்கு ஒருமொழி பகுதி 01ற்குள் செல்ல இங்கே அழுத்தவும்

1 கருத்து: