நான் ஓர் ஓட்டைப் பானை - சுயசரிதை
நான் இப்பொழுது ஓர் ஓட்டைப் பானை. என் அடி வயிற்றிலே கொட்டைப் பாக்களவு துவாரத்துடனும், மேலும் சில வெடிப்புகளுட னும் குற்றுயிராய் இருக்கிறேன். முத்துசாமியின் கோடிப் புறத்தில் குப்புறக் கிடக்கிறேன். சில நாட்களுக்கு முன்னரோ என் நிலைவேறு. முத்துசாமியின் மனைவியின் அன்பிற்கும் ஆதரவிற்கும் உரிய நல்லதொரு பானையாய் விளங்கினேன். இன்றோ குற்றுயிராய் கிடக்கின்றேன். என் மனத்திரையிலே தோன்றும் என் கடந்தகால சம்பவங்களை சொல்லி விபரிக்கிறேன் கேளுங்கள்.
நெல்லுச்சேனை என்னும் ஊரிலே கண்ணன் என்னும் மட்பாண்டக் கலைஞன் ஒருவன் இருந்தான். அவன் வீட்டு முற்றத்திலே பலதரப்பட்ட களிமண் வகைகள் குவிந்திருந்தன. ஒருநாள் கண்ணன் அக்களிமண் வகைகளைக் கலந்தான். கற்கள், வேர்கள் போன்றவற்றை பொறுக்கி தூய்மைப் படுத்தினான். பின்னர் நீர் விட்டுக் குழைத்தான். குழைத்த மண்ணை நன்றாக மிதித்தான். மிதித்த மண்ணை குவித்து சாக்குகளால் மூடினான். இரண்டு நாட்கள் கழிந்தன. பின் மண்ணைப் பார்த்தான். திரண்டு போய் இருந்தது.
வண்டிச்சக்கரம் போன்ற திரிகையை எடுத்தான். அந்த திரிகையும் அவன் கைகளுமே மட்பாண்டங்களை உருவாக்கும் பொறிகள். உருட்டிய மண் திரளையை சக்கரத்தின் நடுவில் வைத்தான். சக்கரத்தை சுழற்றிவிட்டான். பின் சில நிமிடங்களில் பெரிய பானை உருவம் தோன்றியது. ஏன்னைப் போலவே பல பானைகள் இப் பூமியில் பிறப்பெடுத்தன. எங்களை காற்றிலே தக்க பருவம் அடையும் வரை நன்றாக உலர வைத்தான். பின் அவன் மடியில் கிடத்தினான். இரண்டு பலகையை எடுத்து ஓர் பலகையை என் வாயினுள் விட்டு மற்றைய பலகையை பின் புறமாக வைத்து மெது மெதுவாகத் தட்டினான். அவன் தட்டி முடிந்ததம் நான் செப்பமானேன்.
பின்பு அக்கினியில் எங்களை வேக வைத்தான். அன்பும் ஆதரவும் காட்டிய கண்ணன் இவ்வாறு செய்கிறானே என எண்ணி வெம்மையில் துடிதுடித்தோம். பின்னர் தான் ஓர் உண்மை தெரிந்தது. பொன்னை நெருப்பிலிட்டு உருக்க உருக்க அது மேலும் ஒளி பெறுமாம். அதுபோலவே நாங்களும் நெருப்பிற் கிடந்து வெந்து துன்புற்று உறுதி கொண்ட உடம்பினரானோம். இப்பொழுதுதான் பானை என்னும் பெயருக்கேற்ற தகுதி உடையவர்கள் ஆனோம். என்ன ஆனந்தம்! இப்பொழுது நாங்கள் முழு நிறைவு பெற்ற பானைகள்.
பின் எங்களைச் சந்தைக்கு எடுத்துச் சென்றான். அங்கு வந்தவர்களில் ஓர் பெண் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்தாள். அவள்தான் முத்துசாமியின் மனைவி. அவள் சிறிது நேரம் எங்களை உற்றுப் பார்த்தாள். பின்னர் என்னைத்தான் முதல் எடுத்தாள். அவள் என்னைத் தட்டிப் பார்த்தாள். உருட்டி உருட்டிப் பார்த்தாள். என்னை விரும்பினாள். பணம் கொடுத்து என்னை வாங்கிச் சென்றாள்.
தைப்பொங்கலன்று முத்துசாமி என்னை நீராட்டி அலங்கரித்தான். திரிபுண்டரமாக திதுநீற்றுக் குறி இட்டான். எனது வாயினிலே இஞ்சி இலை, மாவிலை, மஞ்சள் இலை என்பவற்றைக் கட்டினான.; என்னுள்ளே நீரையும் பாலையும் கலந்து நிரப்பினான். கற்பூர தீபமேற்றப்பட்டது. முத்துசாமியின் மனைவி கோலத்தின் நடுவில் அடுப்பை மூட்டினாள். அடுப்பின் முப்புறமும் தீச் சுவாலை எரிந்தது. என்னைத் தூக்கி அடுப்பில் வைத்தார்கள். இப்பொழுது அந்த வெம்மை எனக்குத் துன்பம் தரவில்லை. புனிதமான மங்கள காரியத்தை நிறைவேற்றுகிறேனே என்று மகிழ்ந்தேன். என்னுள் இருந்த பாலும் நீரும் கொதித்து என் வாயருகே பொங்கத்; தொடங்கியது. கணத்திற்கு கணம் உயர்ந்து பொங்கி கிழக்குபக்கமாக சொரிந்தது. அப்பொழுது “பெங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சிறுவர் பட்டாசு சுட்டு மகிழ்ந்தனர். சூரிய பகவானின் பிரசாதத்தை ஆக்குவதற்கு கருவியாய் இருந்தேன். அதனால் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.
தைப்பொங்கல் இனிது நிறைவேறியது. முத்துசாமியின் மனைவி என்னை நன்றாக சுத்தம் செய்து கவனமாக ஓர் முலையில் கவிழ்த்து வைத்தாள். அந்த முலையில் சில நாள் ஓய்வெடுத்தேன். தைப்பொங்கலை அடுத்து அருவி வெட்டு வந்தது. தொழிலாளர்கள் பலர் முத்துசாமியின் கழனியில் அருவி வெட்டினர். பலருக்கு சோறு சமைக்க வேண்டி இருந்ததால் முத்துசாமியின் மனைவி என்னை எடுத்தாள். நான் அன்றிலிருந்து இரண்டு முன்று நாள் சமைக்க உபயோகப்பட்டேன். நான் வீட்டிற்கு வந்த நல்ல நேரமோ என்னவோ முத்ததுசாமியின் மனைவிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்கள் அக்குழந்தையை நீராட்டுவதற்கு வெந்நீர் வைக்கும் பாத்திரமானேன். குழந்தைக்கு தாய் நீராட்டும் வேளையிலே அயலில் இருந்து அக் குழந்தையின் பொலிவைப் போற்றுவேன். வாழ்த்துவேன். தங்கச் சிலை போன்ற அழகான குழந்தையது.
சிலவேளையில் நான் நெல் அவிக்கப் பயன்படுவதும் உண்டு. ஒரு முறை முத்துசாமியின் மனைவி நெல் அவித்தபின் என்னைக் கழுவுவதற்காக கிணற்றடியில் வைத்தாள். அயலிலே ஆட்டுக்குட்டி துள்ளி விளையாடியது. விளையாட்டுப் பிள்ளைதானே அது. அதற்கென்ன தெரியும்? அது ஓடிய வேகத்தில் தற்செயலாக அதன் காற்குழம்பு என் அடிவயிற்றிலே துவாரம் உண்டாக்கி விட்டது. என் நிலைகண்ட முத்துசாமியின் மனைவிக்கு அழவில்லாத் துக்கம் உண்டானது. ஆவள் அழுதாள். ஆட்டுக்குட்டியைத் திட்டினாள். இருந்தும் என்ன செய்ய முடியும். அன்றிலிருந்து நான் எதற்கும் பயன்படாத ஓட்டைப் பானையானேன்.
கருத்துகள் இல்லை