கைவிடப்பட்ட கைபேசி தன் கதை கூறல் - சுயசரிதை
கைவிடப்பட்ட கைபேசி தன் கதை கூறல்
வணக்கம் நண்பர்களே! இன்று நான் யாருக்கும் பயன்படாத ஒரு கைத் தொலைபேசியாக இந்த வீட்டின் அறையிலுள்ள மூலையில் கிடக்கிறேன். ஆனால் ஒரு காலத்தில் என்நிலை வேறானதாக இருந்தது. எனது கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். கேளுங்கள்.
என்னை பின்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தார் பல வருடங்களுக்கு முன்னர் தயாரித்தார்கள். அழகான சிறிய வர்ணத் திரையையும் பொத்தான்களையும் வெளித் தோற்றமாக கொண்டு இருந்தேன். எனக்கு “நோக்கியா” என்று பெயர் வைத்திருந்தார்கள். அங்கிருந்து சில மாதங்களின் பின் என்னை பெட்டியிலிட்டு என்னுடன் இன்னும் சிலரையும் சேர்த்து இலங்கைக்கு அனுப்பினர். இலங்கைத் தீவை வந்தடைந்த பின் அதன் தலை நகரிலிருந்து மட்டக்களப்பிற்கு விற்பனைக்காக வந்து சேர்ந்தேன்.
கையடக்கத் தொலைபேசிகளின் வரிசையில் அது ஆரம்ப காலம் என்பதால் நான் அக்காலத்திலே தனிக்காட்டு ராஜாவாக இருந்தேன் என்று கூறலாம். அப்போது எங்களுக்கு மவுசு கொஞ்சம் அதிகமாக இருந்ததனால் எங்களது விலையும் அதிகமாக காணப்பட்டது. எல்லோர் கைகளிலும் நான் பயன்படாமல் போனாலும் பணக்காரர்களின் கைகளில் தவழப் போகின்றோம் என்று நினைக்கும்பொழுது என்னையறியாமலே எனக்குள் இருந்த தலைக்கனம் வெளிப்பட்டது.
நாங்கள் காட்சிக்காக வைக்கப் பட்டிருந்த கடைகளில் பலர் எங்களை வந்து பார்வையிட்டு செல்வதையும், அதில் சிலர் விலையைக் கேட்டுவிட்டு விலகிச் செல்வதையும், சிலர் என் நண்பர்களில் ஓரிருவரை வாங்கிக் கொண்டு செல்வதையும் நான் அவதானித்த வண்ணமாக இருந்தேன். என்னதான் நான் கர்வமாக நடந்து கொண்டாலும் என்னை யாரும் இன்னும் உரிய விலை கொடுத்து வாங்கிச் செல்வதற்காக வரவில்லையே! என்ற கவலையும் உறுத்திக் கொண்டுதானிருந்தது. இருப்பினும் என்னையும் வாங்குவதற்கு ஒரு பணக்காரன் வருவான் அவன் கைகளில் நாம் கம்பீரமாக தவழலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன். அந்த நாளும் வந்தது.
ஒருநாள் ஒரு இளைஞன் தனது நண்பர்கள் பலருடன் தொலைபேசியை கொள்வனவு செய்வதற்காக வந்திருந்தான். அவனைப் பார்க்க நல்ல வசதி படைத்தவரின் பிள்ளையாகத் தான் இருக்க வேண்டும் என்றே எனக்கு தோன்றியது. அவனும் அவனது நண்பர்களும், என்னுடன் சேர்ந்து பல தொலைபேசிகளை பார்வையிட்டனர். இறுதியில் அவர்கள் என்னை தேர்ந்தெடுத்ததால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இனி இந்த கடையில் ஒரே நிலையில் நின்று கொண்டிருந்த காலம் இத்துடன் நிறைவு பெறப்போகிறது அத்துடன் புது வீட்டுக்கு நான் விரும்பி ஏற்றுக்கொண்ட எஜமானனுடன் செல்லப்போகிறேன் என்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தேன்.
குறித்த இளைஞன் எனக்காக குறிக்கப்பட்டிருந்த விலையை கொடுத்து விட்டு என்னை வாங்கினான். அந்த நிமிடம் நான் புதிதாக ஒரு உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டேன். அதாவது “என் உயிர் உள்ளவரைக்கும் எனது எஜமானனுக்கு என்னால் முடிந்த அளவு சேவையை எந்த ஒரு இடர்பாடுகளும் இன்றி வழங்குவேன்” என்பதே அதுவாகும்.
ஒருவாறாக தனது நண்பர்களுடன் அவன் விடை பெற்றுக்கொண்டதுடன் என்னை எடுத்துக் கொண்டு அவன் தனது இல்லத்திற்கு சென்றான். வீடு சென்றதும் அங்கிருந்த அனைவரிடமும் என்னை காட்டி சந்தோஷப்பட்டான். அதுமாத்திரமன்றி எனது வர்ணத் திரையையும், பொத்தான்களையும்; காண்பித்து உங்களில் யாரிடமும் இல்லாத தொலைபேசியை நான் வாங்கி விட்டேன் என்று பெருமைப்பட்டுக் கொண்டான். இதனைக் கேட்டதும் மீண்டும் எனக்குள் இருந்த கர்வம் அதிகரித்தது என்று கூறலாம்.
அன்றைய நாளிலிருந்து அவனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு கருவியானேன். அவன் செல்லுமிடமெல்லாம் என்னையும் எடுத்துச் சென்றான். அத்துடன் தன் நண்பர்கள் பலரிடமும் என்னை காட்டி பெருமைப்பட்டுக் கொண்டான். அது மாத்திரமன்றி அவனது சந்தோஷங்களையும், துக்கங்களையும் என் மூலமாக ஏனையோருடன் பகிர்ந்து கொண்டான். இவற்றிற்கெல்லாம் மேலாக அவனின் காதலிக்கு அவனது ஆழமான அன்பை கடத்தும் சாதனமாகவும் மாறினேன். அவனது அன்றாட செயல்களில் நான் முக்கியமான ஒரு பங்கு வகித்தேன் என்றே கூறலாம். அதனால் அவன் என்னை மிகவும் பத்திரமாக பாதுகாத்து கொண்டான். எனது திரையில் சிறிதும் கீறல்கள் விழாதபடி மேல் உறைகள் எல்லாம் இட்டு வைத்திருந்தான்.
அத்துடன் என்னை கண்டபடி போடாமல் எனக்கென்று அவனது மேஜையில் ஓர் இடமும் ஒதுக்கியிருந்தான். இவற்றையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இவ்வாறு நாட்கள் நகர்ந்தன. வாரங்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்கள் ஆகி ஐந்து ஆண்டுகளும் கடந்தன. எனக்கு ஒரு நொடிப் பொழுதில் இவை நிகழ்ந்து விட்டதாகவே தோன்றியது. காலம் சென்றதே தெரியவில்லை. அதன் பிறகுதான் எனக்கான சோதனைக் காலம் ஆரம்பித்தது.
கால ஓட்டத்தில் என்னைப் போன்ற பல வகையான தொலைபேசிகளும் சந்தைக்கு வர ஆரம்பித்தன. இதனால் எனது மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. புதிதாக வரும் தொலைபேசிகள் எங்களை விட சில சிறப்புக்களை கொண்டதாகவும் அமைந்த காரணத்தினால் மக்களுக்கு எங்கள் மேல் விருப்பு குறைந்து போனது. எனது எஜமானனின் நண்பர்களின் வீடுகளுக்கு சில சமயம் சென்றபோது எனக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சில நண்பர்கள் கவனிப்பாரற்று கிடப்பதையும் என்னால் காண முடிந்துத. எனக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்ற அச்சமும் என்னுள் குடிகொண்டது.
இந்நிலை தொடர்ந்து கொண்டு இருக்கும் சமயத்தில் சீனா நாட்டில் இருந்து குறைந்த விலையில் தொடுதிரை தொலைபேசிகள் வர ஆரம்பித்தன. அந்த தொலைபேசிகள் என்னை விட பெரியதாகவும் பல விசேட சிறப்பம்சங்கள் இற்றைப்படுத்தப்பட்டதாகவும் அமைந்திருந்தன. மிகவும் மலிவான விலையில் கிடைக்கக் கூடியதாகவும் இருந்தன. இதன் காரணத்தினால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த தொலைபேசிகளின் பின்னால் செல்வதை காண முடிந்தது.
எனது எஜமானனின் நண்பர்கள் சிலரும் அந்த தொலைபேசியை காண்பித்து ஏதேதோ பெருமையாக பீற்றிக் கொண்டிருந்ததையும் என்னால் காண முடிந்தது. இது எனக்கு மிகுந்த பொறாமையாக இருந்தது. அத்துடன் அந்த தொலை பேசிகளில் உலகத்தில் நடக்கும் எல்லா விடயங்களையும் காணொளியாக இணையத்தின் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாகவும், பார்க்கக் கூடியதாகவும் இருந்ததாக பேசிக்கொண்டனர். இதைக் கேட்டதும் எனது எஜமானனுக்கு அதையும் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இருப்பினும் என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
ஒருநாள் எங்கள் வீட்டிற்கு எனது எஜமானனுடன் “சம்சங்” எனும் பெயருடன் ஒரு தொடுதிரை தொலைபேசியும் வருகை தந்தது. அது வந்த அன்றே எஜமானன் என்னை மேசையின் ஓரமாக தள்ளிவிட்டு எனது இடத்தை அந்த தொலைபேசிக்கு கொடுத்தான். அந்த தொலைபேசி என்னை பார்த்து ஏளனமாக நகைத்தது. அப்பொழுதுதான் நான் முன்னர் கர்வமாக நடந்து கொண்டது மிகவும் தவறு என்பதை உணர்ந்தேன். அத்துடன் தாங்க முடியாத கவலையில் தலை கவிழ்ந்தேன். அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அது என்னுடைய எஜமானின் மனதை ஆட்கொள்ள ஆரம்பித்தது. அத்துடன் எனது இடத்தையும் பிடித்துக்கொண்டது. எனது எஜமான் என்னுடன் பேசுவதை நிறுத்தினார்.
என்னில் தூசு படிய ஆரம்பித்தது அடிக்கடி மேசையில் இருந்து தவறி விழுந்தேன். தூக்கி விடவும் யாருமில்லை என்பதை உணர்ந்தேன். எனது கண்ணாடியில் கூட பல கீறல்கள் விழுந்தன. நாளடைவில் நான் எனது எஜமானனின் அறையிலிருந்து வெளியேற்றப் பட்டேன். அந்த சமயத்தில் சம்சங் தொலைபேசி என்னை பார்த்து ஏளனமாக சிரித்தது. அந்த சமயத்தில் “நானும் ஒரு காலத்தில் உன்னைப் போன்று தான் கர்வமாக இருந்தேன் ஆனால் இன்று நீ வந்தவுடன் நான் வெளியேற்றப்படுகிறேன் இதேபோல் ஒருநாள் என் நிலை உனக்கும் வரலாம் அதனால் கர்வத்தை விடுத்து அவதானமாக இருந்து கொள் அத்துடன் நான் பல முறை விழுந்தாலும் மீண்டும் எழுந்து வருவேன் ஆனால் நீ அவ்வாறல்ல ஒருமுறை விழுந்தால் அன்றே நீ இறந்து விடுவாய் ஆகையால் பொறுப்புடன் நடந்து கொள்” என்று கூறிவிட்டு வெளியேறினேன்.
அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நான் அவனது தம்பியின் அறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டேன். அவன் ஆர்வத்துடன் என்னை பெற்றுக் கொண்டது மாத்திரமன்றி அன்றிலிருந்து என்னிலிருக்கும் சிறுசிறு விளையாட்டுக்களை விளையாட ஆரம்பித்தான். இதனால் அவனது கல்வி கொஞ்சம் கொஞ்சமாக சீரழிய ஆரம்பித்தது. இவன் இவ்வாறு என்னில் அதிக காலத்தை கழிப்பது அவனது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று தோன்றியது.
தவணைப் பரீட்சை நெருங்கிக் கொண்டு இருந்தது. ஆனால் அந்த சிறுவனோ என்னில் விளையாடிக் கொண்டிருந்தான். இதனை கண்காணித்துக் கொண்டிருந்த அவரது தந்தையும் தாயும் அவனது கையிலிருந்து என்னை வாங்கி மேசையில் வைத்துவிட்டு “நீ ஒழுங்காக படிக்கவில்லையானால் உன்னிடமிருந்து இதனை பறிமுதல் செய்வோம்” என்று எச்சரித்துவிட்டு சென்றனர். இருப்பினும் அவன் கேட்டபாடு இல்லை. இச்செயற்பாட்டை தொடர்ந்து கொண்டேயிருந்தான். ஒருநாள் இதனை கண்டு ஆத்திரமுற்ற அவரது தந்தை அவன் கையிலிருந்து என்னைப் பிடுங்கி சுவரிலில் எறிந்து விட்டார். நான் சுவரில் மோதி எனது உடல் சிதைவுற்று கீழே விழுந்தேன.; எனது அழகான வர்ணத் திரையும் உடைந்து போனது.
பின்னர் அவனது அம்மா வந்து என்னை கையிலெடுத்து என்னை பொருத்த ஆரம்பித்தார். என்னை முழுமையாக பொருத்தியும் என்னால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியவில்லை. அவர் வீசி எறிந்த வேகத்தில் நான் பலத்த அடிபட்டு எனது உடல் பாகங்கள் மிகவும் சேதம் அடைந்திருந்தன. இதனைப் பார்த்துவிட்டு இனி எந்த பயனும் இல்லை என்று அறிந்து கொண்ட அவனது தாயார் என்னை அந்த மூலையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இன்று நான் “ஒன்றுக்கும் உதவாதது” என்ற பெயருடன் கைவிடப்பட்ட ஒரு தொலைபேசியாக இந்த மூலையில் முடங்கிக் கிடக்கிறேன். நான் இவ்வாறு ஆனதற்கான முக்கிய காரணம் காலத்தின் தேவைக்கேற்ப என்னால் இற்றைப் படுத்திக்கொள்ள முடியாததுதான். எனது எஜமானன் ஆசைப்பட்டது போன்று என்னால் இற்றைப் படுத்திக்கொள்ள முடிந்திருந்தால் ஒருவேளை நானும் இன்றும் சிறப்புடன் வாழ்ந்திருக்க முடியும்.
ஆகவே நண்பர்களே! நீங்களும் ஒவ்வொரு கால மாற்றத்திற்கு ஏற்ப உங்களை இற்றைப்படுத்திக் கொண்டு வாழ்வதன் மூலமே இவ்வுலகில் நிலைக்கவும் உயர்ந்து செல்லவும் முடியும். அத்துடன் எதையும் நாம் அளவோடு பயன்படுத்தினால் அது ஆக்கத்தை தருவதாக இருக்கும். அளவுக்கு அதிகமானால் அது நம் வாழ்க்கையை அழித்து விடும். தொலைபேசி பாவனையும் அப்படித்தான். என்னை நீங்கள் நல்ல வழியில் அளவோடு பயன்படுத்தினால் உங்கள் வாழ்க்கை உயர்வடைய உதவுவேன். எனவே உணர்ந்து செயல்படுங்கள்.
முற்றும்.
கருத்துகள் இல்லை