போதையற்ற நாட்டைக் கட்டியெழுப்புவோம் (கட்டுரை)
போதையற்ற நாட்டைக் கட்டி எழுப்புவோம்
இன்றைய நமது சமுதாயம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய தனிமனித, சமூகம் சார் பிரச்சனைகளுள் ஒன்று போதைப் பொருள் பாவனை. இதன் மூலம் இன்று உலகமே அதிர்ந்து நிற்கிறது. இதற்கு இன்று தடுப்பிடாவிட்டால் நாளைய சமுதாயம் அழிவைத் தொடும் என்பதில் ஐயமில்லை. இக்கட்டுரையின் மூலம் போதை வஸ்துகள், அதன் விளைவுகள், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் என்றவற்றை ஆராய்வோம்.
இன்றைய உலகில் மதுபானம், புகையிலை, அபின், ஹெரோயின், கஞ்சா பான் மசாலா, ஐஸ் என்று பலவகையான போதைப் பொருட்கள் காணப்படுகின்றன. இப்போதைப் பொருளானது பொழுதுபோக்கிற்காகவும் மற்றும் தனி மனிதர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்காகவும், தற்காலிக மகிழ்வினை வேண்டியும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் 02. 30 கோடி அளவான மக்கள் போதை பொருள் பாவனைக்கு உள்ளாகி உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு வகையான போதைப் பொருளிலும் வெவ்வேறு வகையான வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான சந்தோஷங்கள் கிடைப்பதாக பயன்படுத்துவோர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இவற்றை தொடர்ந்து உள்ளெடுப்பதன் மூலம் திருடுதல், பொருட்களை அடகு வைத்தல், பிச்சை எடுத்தல், முறையற்ற விதத்தில் நடந்து கொள்ளல், பிறரை துன்புறுத்தல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் போன்ற சமூகத்திற்கு முரண்பாடான நடத்தைகளை வெளிக்காட்டுகின்றமையை அவதானிக்கலாம்.
அத்துடன் இந்த போதை வஸ்துகளை தொடர்ந்தும் உள்ளெடுப்பதன் மூலம் நாளடைவில் இதய நோய், மூச்சுத் திணறல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுடன் கணையம், கல்லீரல், உணவு குழாய் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளால் சரியாக உணவினை உட்கொள்ள முடியாமல் போகின்றது. இதனால் வயிற்றுப்புண், எடை குறைவு நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்சனைகளுடன் அது விரைவான மரணத்திற்கும் இட்டுச் செல்கின்றது. இவை மாத்திரமன்றி இவற்றை பாவிப்பவர்கள் பல்வேறு உளம் சார் பிரச்சனைகளுக்கும் உள்ளாகின்றனர்.
இவ்வாறு உடல், உள, சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தும் போதைப் பொருளினை நாம் தடுக்காவிட்டால் எமது நாட்டை உலகை மீட்க முடியாமல் போய்விடும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே மக்களை விழிப்புணர்வு ஊட்டுவதற்காக ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையை பொறுத்தவரை ஒருவர் போதை பொருளை ஐந்து கிராமிற்கு அல்லது அதற்கு அதிகமாக வைத்திருந்தால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று போதை வஸ்து தொடர்பான சட்டங்கள் கூறுகின்றன.
இது எவ்வாறு இருப்பினும் போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளைப் போன்று இன்னும் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும். அத்துடன் போதைப்பொருள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் அடிநிலை மக்கள் வரை சென்றடைய கூடியவறான வகையிலமைந்த திட்டங்களின் மூலமுமே இப்போதைப் பொருளை கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் போதைப்பொருள் பரப்புதல் தொடர்பாக உலகளாவிய ரீதியில் பெரிய மாfபியாக்கள் இயங்குகின்றன அவற்றை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதன்று எனவே போதை பொருட்களினால் ஏற்படும் விளைவுகளை தெரியப்படுத்தி அது தொடர்பான அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலமே மக்கள் அவ்வழியில் நாடுவதை குறைக்க முடியும்.
எனவே சட்டங்களை கடுமைப்படுத்துவதுடன் மேலதிக விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி எமது நாட்டை கட்டி எழுப்புவதற்கு ஆவன செய்வோம்.
கருத்துகள் இல்லை