வேற்றுமைகள் பகுதி 02 - Vetrumaikal 5ம் வேற்றுமை, 6ம் வேற்றுமை , ஏழாம் வேற்றுமை , எட்டாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
இதனை நீங்கல் வேற்றுமை என்று அழைப்பர். இவற்றுக்கான வேற்றுமை உருபு "இல், இன்" என்பதாகும் இதன் பொருள்களாக பின்வருவன அமைகின்றன.
• நீங்கல் பொருள் - மலையின் வீழ் அருவி• எல்லைப் பொருள் - இலங்கையின் வடக்கே இந்தியா உள்ளது.
• ஒப்பு - ராமனில் பரதன் சிறந்தவன்.
• ஏது : கவியில் சிறந்தவன் கம்பன்
ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாக பின்வருவன காணப்படுகின்றன.
• இருந்து
(உ+ம்) மரத்திலிருந்து கனி விழுந்தது.
• நின்று
(உ+ம்) வீட்டினின்று புறப்பட்டான்.
• காட்டிலும்
(உ+ம்) அவனைக் காட்டிலும் இவன் பெரியவன்
• பார்க்கிலும்
(உ+ம்) கமலாவை பார்க்கிறோம் சீதா புத்திசாலி
• விட
(உ+ம்) அன்வரை விட சலீம் நல்லவன்
நீங்கல் பொருள்
இது ஓரிடத்தில் இருந்து விலகுவதை குறிக்கும். நீங்கல் பொருளானது பருப்பொருள் சார்ந்த இடம், பருப்பொருள் சாராத இடம் என இரு வகைப்படும்.
• பருப்பொருள் சார்ந்த இடம் : மாமா ஊரிலிருந்து வந்தார்.• பருப்பொருள் சாராத இடம் : தூக்கத்திலிருந்து விழித்தேன்.
அங்கு, இங்கு, மேல், கீழ் முதலிய பெயர் சொற்களுடன் இருந்து என்னும் சொல் உருபு இணைந்து நீங்கல் பொருள் உணர்த்துகின்றது.
• அங்கிருந்து• இங்கிருந்து
• மேலிருந்து
• கீழிருந்து
- பாம்பிடமிருந்து தேரை தப்பி சென்றது.
- பூனையிடமிருந்து புறாவை காப்பாற்றினேன்.
ஒப்பு பொருள்
• என்னை விட அவன் கெட்டிக்காரன்.
• மாலாவை பார்க்கிலும் மாலதி அழகானவள்.
• கவிதையை காட்டிலும் நாவலையே பலரும் விரும்புகின்றனர்.
• இக்கால தமிழில் ஒப்பு பொருள் இல் உருபினால் உணர்த்தப்படுவதில்லை.
எல்லைப் பொருள்
வடக்கு, கிழக்கு முதலிய திசை பெயர்கள், முன், பின், மேல், கீழ், உள்ளே, வெளியே முதலிய சொற்கள் இன் உருபு ஏற்ற பெயரை அடுத்து வந்து எல்லை பொருள் அல்லது இடக்குறிப்பை உணர்த்துகின்றன.
உதாரணம் :• இலங்கையின் வடக்கில் இந்தியா இருக்கிறது.
• வீட்டின் முன்னால் கோயில் இருக்கிறது.
ஏதுப் பொருள்
ஒன்றின் உயர்வு அல்லது தாழ்வு போன்றவற்றுக்கு காரணமாய் அமையும் பொருள் ஏதுபொருள் எனப்படுகிறது. பழந்தமிழில் இல் உருபு ஏதுபொருளில் வந்துள்ளது.
• கல்வியில் பெரியன் கம்பன் என்னும் தொடரில் கல்வி கற்ற காரணத்தால் கம்பன் பெரியவன் என்னும் பொருள் புலப்படுகிறது.ஆறாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமையின் சொல் உருபு உடைய என்பதாகும்.
• கமலாவினுடைய புத்தகம்
ஆறாம் வேற்றுமை உடைமை பொருளில் வரும். இது இரண்டு வகைப்படும்.
• தற்கிழமை - எனது கை , ராமனது கருமை
• பிறிதின் கிழமை -தமிழ் கவியினது புத்தகம்
ஏழாம் வேற்றுமை
இது இட வேற்றுமை என்றும் அழைக்கப்படும். இவ் வேற்றுமையானது கண், இல், கால், கடை, உள், இடம் முதலான 28 உருபுகளை கொண்டுள்ளது என நன்னூலார் கூறுவார். ஏழாம் வேற்றுமையானது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகைப் பெயர்களும் ஒன்றை தனக்கு இடமாகக் கொண்டு வரும்.
உதாரணம்• பொருள் இடமாதல் : மரத்தின் கண் கிழி
• இடம் இடமாதல் : ஊரின் கண் இல்லம்
• காலம் இடமாதல் : நாளின் கண் மணித்தியாலம் உண்டு
• சினை இடமாதல் : கையின் கண் விரல் உண்டு
• குணம் இடமாதல் : கருப்பின் கண்மிக்கது அழகு
• தொழில் இடமாதல் : ஆட்டத்தின் கண் அபிநயம் உண்டு
• இடப்பொருள் என்பது ஒரு பொருள் ஓரிடத்தில் இருப்பதை சுட்டுவதாகும்.
உதாரணம் : அப்பா வீட்டில் இருக்கிறார்
• இடம் என்பது பருப்பொருள் சார்ந்த இடத்தை மட்டுமன்றி பருப்பொருள் சாராதவற்றையும் உள்ளடக்கும். உணர்வு நினைவு எல்லாம் இதனுள்ளடங்கும்.
உதாரணம் : நீ கூறியவற்றை என் நினைவில் வைத்திருக்கிறேன்.
• இல் உருபு கால வரையறையையும் உணர்த்த பயன்படுகிறது.
உதாரணம் : இந்த வேலையை ஒரு வாரத்தில் முடித்து விடலாம்.
• ஒரு குழுவினுள் அமையும் பிறிதொரு குழுவை சுட்டவும் இல் உருபு பயன்படுகிறது.
உதாரணம் : யானகிராமனின் நாவல்களில் மோகமுள்தான் சிறந்தது.
• இங்கு இல் உருபுக்கு பதிலாக உள் எனும் உருபு வரும்.
உதாரணம் : நாவல்களுள், தொழில்களுள், மாணவர்களுள், மனிதருள்
எட்டாம் வேற்றுமை
இதனை விளி வேற்றுமை என குறிப்பிடுவது மரபு. பேசுவோன் படர்க்கை இடத்திற்கு உரியவரை முன்னிலைப்படுத்தி அழைத்து பேசுவதே விளி வேற்றுமை எனப்படும்.உதாரணம்:
• கண்ணா (நீ) எங்கே போகிறாய்?
• அப்பா (நீங்கள்) கொஞ்சம் நில்லுங்கள்.
விழி வேற்றுமைக்கு தனியான உருபுகள் இல்லை. பெயர் சொற்களின் ஈறு அடையும் திரிபினால் இது உணர்த்தப்படுகிறது.
விளி வேற்றுமைக்கும் ஏனைய வேற்றுமைக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. ஏனைய வேற்றுமை ஏற்ற பெயர்கள் வாக்கியத்தினுள் எழுவாய், செயப்படுபொருள் போல வாக்கிய உறுப்புகளாக தொழிப்படுகின்றன. ஆனால் விளி வேற்றுமை பெயர் வாக்கியத்திற்கு வெளியே நிற்கின்றது. அது வாக்கியத்தின் உறுப்பு அல்ல
கருத்துகள் இல்லை