header

அண்மையவை

தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பு முறை பகுதி 2 - மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை


மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை

மெய் எழுத்துகளை அவற்றின் உச்சரிப்பு அல்லது பிறப்பு அடிப்படையில் பின்வருமாறு ஏழு வகைகளாக பிரிக்கலாம்

1. ஈரிதழ் ஒலிகள்

பின்வரும் எழுத்துக்களை உச்சரிக்கும் போது இரண்டு இதழ்களும்(உதடுகளும்) பொருந்த உச்சரிக்கப்படும். ஆகவே இவை ஈரிதழ் ஒலிகள் என அழைக்கப்படுகிறது. அவையாவன. 

  • ப், ம்

2. உதட்டுப் பல்ஒலி

ந கரத்தை(ந்) உச்சரிக்கும்போது கீழ் உதடு மேற்பல் பொருந்த உச்சரிக்கின்றோம் ஆகவே இது உதட்டுப்பல் ஒலி எனப்படும்.


3. பல் ஒலிகள்

பின்வரும் எழுத்துக்களை உச்சரிக்கும்போது நுனிநா,  மேற்பல்லின் உட்புறத்தை பொருந்த உச்சரிக்கின்றோம் ஆகவே இவை பல் ஒலிகள் எனப்படும். அவையாவன  

  • த, ன

4. நுனி அண்ண ஒலிகள்

பின்வரும் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நுனி நா,  நுனி அண்ணத்தை பொருந்த உச்சரிக்கின்றோம்.
ஆகவே இவை நுனி அண்ண ஒலிகள் எனப்படும். அவையாவன

  • ல், ர், ற், ன்

5. வளைநா ஒலிகள்

பின்வரும் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நுனிநாவானது மேல்நோக்கி வளைந்து நடு அண்ணத்தை தொட உச்சரிக்கப்படும் . ஆகவே இவை வளைநா ஒலிகள் என அழைக்கப்படும் அவையாவன

  • ட் , ண் , ழ் , ள்

6. அண்ண ஒலிகள்

பின்வரும் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நடு நாவானது நடு அண்ணத்தை தொட உச்சரிக்கின்றோம்.  ஆகையால் இவற்றை அண்ண ஒலிகள் என்பர் .
அவையாவன

  • ச் , ஞ் , ய்

7. கடை அண்ண ஒலிகள்

பின்வரும் எழுத்துக்களை உச்சரிக்கும் போது கடை நாவானது கடை அண்ணத்தை தொட உச்சரிக்கிறோம் ஆகவே இவை கடை அண்ண ஒலிகள் எனப்படும்.
  அவையாவன

  •   க் , ங்

மேற்கூறப்பட்டவற்றில் ப், ம் ஆகியவை ஈரிதழ்  ஒலிகள் என முன்னர் அறிந்தோம் எனினும் இவை வெவ்வேறு விதமாக ஒலிக்கப்படுவதை காண முடியும் இதற்கு இவை உச்சரிக்கப்படும் முறையே காரணம் ஆகும்.

ப் வல்லின வகையைச் சார்ந்த எழுத்து ஆகும் வல்லின எழுத்துக்களை உச்சரிக்கும் போது இரு உதடுகளையும் பொருந்த வைத்து வாய்க்குள் காற்றை தடைசெய்து திடீரென வெளிவிடுகின்றோம். காற்று வாயினாலேயே வெளிவருகின்றது.

இவ்வாறு ஒலிக்கப்படுவதை வெடிப்பொலி அல்லது தடையொலி எனப்படும் என்று முன்னர் கற்றோம். எனவே வல்லினம் ஆறும் உச்சரிப்பில் அடிப்படையாக வைத்து பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது

  1. க் - கடை அண்ண வெடிப்பொலி
  2. ச் - அண்ண வெடிப்பொலி
  3. ட் - வளைநா வெடிப்பொலி
  4. த் - பல் வெடிப்பொலி
  5. ப் - ஈரிதழ் வெடிப்பொலி
  6. ற் - நுனி அண்ண வெடிப்பொலி

ம் மெல்லின வகையைச் சார்ந்த எழுத்து ஆகும் மெல்லின எழுத்துக்களை உச்சரிக்கும் போது காற்றை வாய்க்குள் தடை செய்யாமல் மூக்கு வழியாக வெளி விடுகின்றோம் ஆகையால் இவை மூக்கொலிகள் எனப்படும் என முன்னர் கற்றோம். 

ஆறு மெல்லின மெய்களையும் மூக்கை பொத்திக்கொண்டு உச்சரிக்க முடியாது.இவை உச்சரிப்பின் அடிப்படையில் பின்வருமாறு அழைக்கப்படும்.

  1. ங் - கடை அண்ண மூக்கொலி
  2. ஞ் - அண்ண மூக்கொலி
  3. ண் - வளைநா மூக்கொலி
  4. ந் - பல் மூக்கொலி
  5. ம் - ஈரிதழ் மூக்கொலி
  6. ன் - நுனி அண்ண மூக்கொலி

இவைதவிர இடையின மெய்கள் அவற்றின் உச்சரிப்பின் அடிப்படையில் பின்வருமாறு அழைக்கப்படும்


மருங்கொலிகள்

பின்வரும் எழுத்துக்களை உச்சரிக்கும் போது காற்றானது நாக்கின் இருமருங்கும் வெளியேற்றப்படுவதால் இவை மருங்கொலிகள் எனப்படும். அவையாவன

  • ல் - இவ்வெழுத்தை உச்சரிக்கும்போது நுனி நா நுனி அண்ணத்தை தொட காற்றானது நாவின் இரண்டு விளிம்புகளாலும் வெளியேறுகின்றது.
  • ழ் , ள் - இவ் எழுத்துக்களை உச்சரிக்கும் போதும் நுனி நா மேல்நோக்கி வளைந்து நடு அண்ணத்தைத் தொட காற்றானது நாக்கின் 2 விளிம்புகளாலும் வெளியேறுகின்றது.

வருடொலி

ர் எழுத்தை உச்சரிக்கும்போது நுனி நா நுனி அண்ணத்தை வருட ஒலி பிறப்பதால் இது வருடொலி என அழைக்கப்படுகிறது.


ஆடொலி

ற எழுத்தை உச்சரிக்கும் போது நுனிநா நுனி அண்ணத்தை பொருந்தி அதிர்வதால் இது ஆடொலி எனப்படும்.


அரை உயிர்

பின்வரும் எழுத்துக்கள் உயிர் ஒலிக்குரிய தன்மையையும் மெய்யொலிக்குரிய தன்மையும் கொண்டிருப்பதால் இவை அரை உயிர் எனப்படும். அவையாவன

  • ய் = ஐ »»» அய்
  • வ் = ஔ »»» அவ்

மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை பற்றிய சுருக்கப் பார்வை
மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை

தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பு முறை பகுதி 1



2 கருத்துகள்: