header

அண்மையவை

புணர்ச்சி வகைகளும் அவை பற்றிய விளக்கமும் - இயல்புப் புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும் , அகப்புணர்ச்சியும் புறப்புணர்ச்சியும்

புணர்ச்சி

இப்பகுதியில் சொற்புணர்ச்சி என்றால் என்ன? அதன் வகைப்பாடுகளான இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி, அகப்புணர்ச்சி புறப்புணர்ச்சி என்பனவற்றை நாம் அறிந்துகொள்வோம்.


சொற்புணர்ச்சி

சொல்லின் உறுப்புக்களோ அல்லது சொற்களோ பொருள் தரும் வகையில் ஒன்றோடு ஒன்று இணைந்து வருவது சொற்புணர்ச்சி எனப்படும். 

  • உதாரணம் :
  1. நாம்  + கள்  = நாங்கள்
  2. உண்  + ட் + ஆன்  = உண்டான்
  3. மண் + வெட்டி  = மண்வெட்டி
  4. கடல்  + கரை  = கடற்கரை
  5. வேல் + எறிந்தான் = வேலெறிந்தான்

சொற்புணர்ச்சியில் பல வகைகள் காணப்படுகின்றன. இனி அவைபற்றி நோக்கலாம்.


1. அகப் புணர்ச்சியும்  புறப் புணர்ச்சியும்


அகப்புணர்ச்சி

சொல்லின் உறுப்புக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வருவது அகப் புணர்ச்சி எனப்படும். 

  •  உதாரணம் :
    1. நாம்+கள் = நாங்கள்
    2. உண்+ட்+ஆன் = உண்டான்

இங்கு ஒரு சொல்லினுள் இடம்பெறும் சொல்லுறுப்புக்கள்  இணைந்து ஒரு சொல்லாக வந்திருப்பதை அவதானிக்கலாம்.

• பகுபதங்களில் இடம்பெறும் புணர்ச்சி 
விகாரங்கள் யாவும் அகப்புணர்ச்சி ஆகும்.

புறப்புணர்ச்சி

  • மார்கழி + திங்கள் = மார்கழித்திங்கள்
  • கடல் + ஓரம் + வீடுகள் + அமைத்தல் + ஆகாது = கடலோரம் வீடுகளமைத்தலாகாது

மேற்கூறப்பட்டுள்ள உதாரணங்களை பார்ப்போமானால் சொற்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து  வந்திருப்பதை அவதானிக்கலாம் இவ்வாறு சொற்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து சொற்றொடராகவோ அல்லது வாக்கியமாகவோ அமைவது புறப்புணர்ச்சி எனப்படும்.

அகப் புணர்ச்சியில் சொல்லின் உறுப்புகள் இணைந்து வருவது போல புற புணர்ச்சியில் சொற்கள் இணைந்து வரும். தற்காலத்தில் புறப்புணர்ச்சியில் பெரும்பாலும் அவசியமான இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் புணர்ச்சி விகாரங்கள் இன்றியே எழுதப்படுகின்றன.


2. இயல்பு புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும்

சொற்புணர்ச்சியில் குறைந்தது இரண்டு உறுப்புகளாவது காணப்படல் வேண்டும் என்பதனை நாம் இதுவரை கற்றதிலிருந்து தெரிந்துகொள்ள முடியும். சொற்புணர்ச்சியில் முதலில் வரும் உறுப்பினை நிலைமொழி என்றும் அதனை தொடர்ந்து வரும் உறுப்பினை வருமொழி என்றும் அழைப்பர்.

  • உதாரணம் :


இயல்பு புணர்ச்சி

சொற்கள் அல்லது சொல்லுறுப்புக்கள் புணரும்போது நிலைமொழி,வருமொழிகளில் எதுவித மாற்றமும் இன்றி புணர்ந்தால் அது இயல்புப் புணர்ச்சி எனப்படும். அதாவது சொற்கள் சேரும்போது அதே சொற்கள் சேர்த்து எழுதப்படும்.

  • உதாரணம் :
    1. மணல் + வீடு = மணல்வீடு
    2. மண் + வெட்டி = மண்வெட்டி
    3. வாழை + மரம் = வாழைமரம்
    4. கடல் + அலை = கடலலை
    5. தேன் + அருவி = தேனருவி

மேற் காட்டப்பட்ட உதாரணத்தில்  இறுதியில் உள்ள கடலலை ,தேனருவி ஆகிய சொற்களும் இயல்பு புணர்ச்சியிலேயே உள்ளடக்கப்படும் காரணம் நிலைமொழியின் இறுதி மெய்யும் வருமொழியின் முதல்  உயிரும் இணைந்து உயிரமெய் என்கிற வரிவடிவம் பெற்றுள்ளதே தவிர நிலைமொழி, வருமொழியில் உள்ள எழுத்துக்கள் எதுவும் தோன்றவும் கெடவோ திரிபடையவோ இல்லை.


விகாரப்புணர்ச்சி

சொற்கள் அல்லது சொல்லுறுப்புக்கள் புணரும்போது நிலைமொழி, வருமொழிகளில் ஏதாவதொரு மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். 

அதாவது சொற்கள் சேரும்போது இடையில் புதிதாக ஒரு எழுத்து தோன்றியோ அல்லது ஓரெழுத்து இன்னுமொரு எழுத்தாக மாற்றமடைந்தோ அல்லது ஓரெழுத்து கெட்டோ(இல்லாமலாகியோ) வரும்.

  • உதாரணம் :
    1. வாழை + பழம் = வாழைப்பழம்
    2. பால் + சோறு = பாற்சோறு
    3. மரம் + வேர் = மரவேர்
  • விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும்.
    1. தோன்றல் விகாரம்
    2. கெடுதல் விகாரம்
    3. திரிதல் விகாரம்

  • தோன்றல் விகாரம்

நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது ஓர் எழுத்து  தோன்றுவது தோன்றல் விகாரம் எனப்படும். 

  • உதாரணம் :
    1. பூ + கொடி = பூங்கொடி
    2. பசு +கன்று = பசுக்கன்று

கெடுதல் விகாரம்

நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது ஓர் எழுத்து இல்லாமல் போவது கெடுதல் விகாரம் எனப்படும் 

  •  உதாரணம் :
    1. மனம் + வேதனை = மனவேதனை
    2. நீலம் + வானம் = நீல வானம்

திரிதல் விகாரம்

நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது ஒர் எழுத்து  இன்னுமொரு எழுத்தாக மாற்றமடைதல் திரிதல் விகாரம் எனப்படும். 

  • உதாரணம் :
    1. கல் + சிலை = கற்சிலை
    2. வாள் + படை  = வாட்படை

மேற்குறிப்பிட்ட உதாரணங்களில் நிலை மொழி இறுதி எழுத்துக்களான ல்,ள் என்பன ற்,ட் ஆகத் திரிந்துள்ளமையை அவதானிக்கலாம்.

    1. காண்+ட்+ஆன் = கண்டான்
    2. சா +த்+த்+ஆன் = செத்தான்

மேலே தரப்பட்டுள்ள உதாரணங்களில் நிலைமொழி எழுத்துக்களான கா,சா என்பன க,செ எனத் திரிந்துள்ளமையை அவதானிக்கலாம்


2 கருத்துகள்: