புணர்ச்சி - பகுதி 3 | மெய்யீற்றுப் புணர்ச்சி - மெய் முன் உயிர் புணர்தல், மெய்முன் மெய் புணர்தல்
மெய்யீற்றுப் புணர்ச்சி (மெய் முன் உயிர் புணர்தல், மெய்முன் மெய் புணர்தல்)
சொற்புணர்ச்சியில் நிலைமொழி வருமொழி களை அடிப்படையாக கொண்ட சொற்புணர்ச்சி பற்றிய விடயங்களை பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்த வகையில் உயிரீற்றுப் புணர்ச்சி தொடர்பான விடயங்கள் பகுதி இரண்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பகுதியில் மெய் ஈற்றுப் புணர்ச்சி தொடர்பான விடயங்களைப் பார்ப்போம்.
மெய் ஈற்றுப் புணர்ச்சி
நிலைமொழியின் இறுதியில் மெய்யெழுத்தும் வருமொழியின் முதலில் உயிரெழுத்து அல்லது மெய்யெழுத்து அமைந்து புணருமானால் அது மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
- இது இரண்டு வகைப்படும்
2. மெய் முன் மெய் புணர்தல்
மெய் முன் உயிர் புணர்தல்
நிலைமொழி ஈற்றில் மெய்யெழுத்தும் வருமொழி முதலில் உயிர் எழுத்தும் அமைந்து புணருமானால் அது மெய் முன் உயிர் புணர்தல் எனப்படும்.
உதாரணம் :யாழ்+ஓசை =யாழோசை
• மெய் முன் உயிர் புணரும் சந்தர்ப்பத்தில் தனிக்குற்றெழுத்தை அடுத்து சொல்லின் இறுதியில் வரும் மெய்கள் வருமொழி முதலில் உயிர்வரின் இரட்டித்து புணரும்.
உதாரணம் :பொன்+ஆபரணம் = பொன்னாபரணம்
• தனிக்குற்றெழுத்தைச் அடுத்த சொல்லின் இறுதியில் வரும் மெய்கள் தவிர்ந்த ஏனைய சொல்லிறுதி மெய்கள் வருமொழி முதலில் உயிர்வரின் இயல்பாகப் புணரும்.
உதாரணம் :கடல் + அலை = கடலலை
மெய் முன் மெய் புணர்தல்
நிலைமொழி ஈற்றில் மெய்யெழுத்தும் வருமொழி முதலில் மெய்யெழுத்தும் அமைந்து புணருமாயின் அது மெய் முன் மெய் புணர்தல் எனப்படும்.
உதாரணம் :பல் + பசை = பற்பசை
இனி மெய்முன் மெய் புணரும் சில சந்தர்ப்பங்களைப் பார்ப்போம்.
அ) மகர ஈற்றுப் புணர்ச்சி
• மரம் +கிளை =மரக்கிளை• வட்டம்+பெட்டி=வட்டப்பெட்டி
• நிலம்+சரிவு=நிலச்சரிவு
மேலே உள்ள புணர்ச்சிகளில் நிலைமொழி ஈற்றில் மகரமும் வருமொழி முதலில் வல்லின மெய்களும் வந்துள்ளன இவ்வாறான சந்தர்ப்பங்களில் புணர்ச்சி எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதை நோக்குவோம்.
• நிலைமொழி ஈற்று மகர மெய் கெட்டு வருமொழி முதல் வல்லின மெய் இரட்டித்து புணர்ச்சி இடம் பெற்றுள்ளது.
உதாரணம் :மரம் + கிளை = மரக்கிளை
• தொகைச் சொல்லாக்கத்தில் மகர ஈற்றின் முன் வல்லினம் வந்தால் மகர ஈறு கெட்டு வல்லினம் மிகும்.
உதாரணம் :வட்டம் + பெட்டி = வட்டப்பெட்டி
• சில சந்தர்ப்பங்களில் மகர ஈற்றின் முன் வல்லினம் வந்தால் மகரம் கெட்டு வல்லினத்தின் இனமான மெல்லினம் மிகும்.
உதாரணம் :மரம் + கொத்தி = மரங்கொத்தி
• சில தொகை சொல்லாக்கத்தில் தோன்றும் அம் சரியயின் மகர ஈறு வல்லினம் வந்தால் மகர ஈறு கெட்டு வலினத்திற்கு இனமான மெல்லினம் மிகும்.
உதாரணம் :பனை + தோப்பு (பனை+அம்+தோப்பு) = பனந்தோப்பு
• சில மகர ஈற்று பெயர்ச் சொற்கள் வேற்றுமை உருபு ஏற்கும்போது அத்து சாரியை பெற்றுப் புணரும்.
உ+ம் :மரம் +ஐ (மரம்+அத்து+ஐ) = மரத்தை
ஆ) ணகர னகர ஈற்றுப் புணர்ச்சி
• மண்+குடம் = மட்குடம்• காண்+சி=காட்சி
• பொன்+காப்பு=பொற்காப்பு
மேலே உள்ள புணர்ச்சிகளை நன்கு அவதானிப்போம் நிலைமொழி ஈற்று ணகரம் டகரமாகவும் றகரமாகவும் திரிபடைந்து புணர்ந்துள்ளன. எனினும் தற்கால வழக்கில் இவ்வாறு புணர்த்தி எழுதுவது குறைவடைந்து வருகிறது.
இ) லகர,ளகர ஈற்றுப் புணர்ச்சி
• கால்+கள்=கால்கள்• நூல்+கள்=நூல்கள்
மேலே உள்ள புணர்ச்சிகள் இயல்பாகவே இடம்பெற்றுள்ளன நெட்டுயிர்களை அடுத்து வரும் லகர ஈறு மாற்றம் அடைவதில்லை.
• நல்+நூல்=நன்னூல்• எள்+நெய்=எண்ணெய்
மேலே உள்ள புணர்ச்சி களில் லகர ளகர ஈற்றின் முன் மெல்லினம் வந்த சந்தர்ப்பங்களில் அவை முறையே னகர ணகரங்களாக திரிபடைந்து உள்ளன. தற்கால வழக்கில் லகர ளகர ஈற்றின் முன் மெல்லினம் வரும் சந்தர்ப்பங்களில் அவை முறையே னகர ணகரங்களாக திரிபடைதல் மிகக் குறைவு.
ஈ) யகர ஈற்றுப் புணர்ச்சி
தொகைச் சொற்களில் யகர ஈற்றின் முன் வரும் வல்லினம் மிகும்.
உதாரணம் :• தாய்+பாசம்=தாய்ப்பாசம்
• நாய்+குட்டி=நாய்க்குட்டி
• தனிக்குறிலை அடுத்து நிலைமொழி ஈற்றில் யகர மெய் வந்து வருமொழி முதலில் மெல்லின தோடு புணரும் போது மெல்லினம் மிகும். ஆனால் தற்கால வழக்கில் இவ்வாறான புணர்ச்சிகள் குறைவாகும்.
உதாரணம் :• மெய்+ஞானம்=மெய்ஞ்ஞானம்
• செய்+நன்றி=செய்ந்நன்றி
உ) ரகர ஈற்றுப் புணர்ச்சி
நிலைமொழி ஈற்றில் ரகர மெய்யும் வருமொழி தொடக்கத்தில் வல்லினமும் வந்து புணரும் சந்தர்ப்பங்களில் தொகைச்சொல்லாக்கத்தின் போது வல்லினம் மிகும். ஏனைய சூழல்களில் இயல்பு புணர்ச்சி இடம்பெறும்.
உதாரணம் :• தேர்+திருவிழா = தேர்த்திருவிழா
• வேர்+கிழக்கு=வேர்க்கிழங்கு
ஊ) ழகர ஈற்றுப் புணர்ச்சி
நிலைமொழி ஈற்றில் ழகர மெய் வந்து வருமொழி தொடக்க வல்லின மெய்யுடன் புணரும் சந்தர்ப்பங்களில் தொகைச்சொல்லாக்கத்தின் போது வல்லினம் மிகும். ஏனைய சந்தர்ப்பங்களில் இயல்பு புணர்ச்சியாக அமையும்.
உதாரணம் :தமிழ்+சங்கம் = தமிழ்ச்சங்கம்
மேலும் இதுபோன்ற விடயங்களை அறிய எம்மோடு இணைந்திருங்கள். அத்துடன் உங்கள் நட்புவட்டத்திலுள்ள ஏனையோருக்கும் பகிர்ந்து அவர்களையும் பயன்பெறச் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை